டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர் யார்..? - மேத்யூ ஹெய்டன் பதில்

டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர் யார்? என்ற கேள்விக்கு மேத்யூ ஹெய்டன் வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக தங்களது கடுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. சாம்பியன் அணிகள் தடுமாறி வரும் வேளையில் இளம் வீரர்களைக் கொண்ட சில அணிகள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

அதோடு இந்த முறை நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் பெரிய பெரிய வீரர்களை தாண்டி இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக இந்த தொடரில் ஏகப்பட்ட புதுப்புது நட்சத்திரம் தோன்றியுள்ளன.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர் யார்? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலியா மற்றும் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் சில கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜாம்பவான் வீரர்களையே அபாயகரமான வீரர்கள் என்று பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் மேத்யூ ஹெய்டன் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன்தான் அபாயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நிக்கோலஸ் பூரனால் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சு என எந்த வகையான பந்துவீச்சுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாட முடியும். என்னை பொறுத்தவரை தற்போதைய கிரிக்கெட் உலகத்திலேயே பூரன்தான் அபாயகரமான வீரர் என்று கூறுவேன். ஏனெனில் அவரால் பெரிய பெரிய சிக்சர்களை எளிதாக அடிக்க முடியும்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியின்போது ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய விதத்தில்தான் ஸ்டோய்னிஸ் விளையாடினார். ஆனால் போட்டியின் பின் வரிசையில் களமிறங்கிய பூரன் அதிரடியாக விளையாடி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அவரது இன்னிங்ஸ்தான் அந்த வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. பூரனை எப்படி பயன்படுத்தினால் நல்லதோ அந்த வகையில் லக்னோ அணி பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com