கோப்பையை வெல்லப்போவது யார்..? - இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்


கோப்பையை வெல்லப்போவது யார்..? - இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @IPL

தினத்தந்தி 3 Jun 2025 4:45 AM IST (Updated: 3 Jun 2025 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது.

லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பெங்களூரு வரலாற்று சாதனை படைத்தது.

அதே வேளையில், பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 36 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 18-ல் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story