அக்சர் படேல் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஏன்..? திலக் வர்மா விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அக்சர் படேல் 3-வது வரிசையில் களமிறங்கினார்.
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்னில் அடங்கி தோல்வியை சந்தித்தது. திலக் வர்மா (62 ரன்) தவிர பேட்டிங்கில் யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படியாக அமையவில்லை.
இந்த போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர் அக்சர் படேல் 3-வது வரிசையில் களமிறங்கி சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் திலக் வர்மா முன் கூட்டியே இறங்கி இருந்தால் அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு உருவாகி இருக்கும் என்று பலரும் விமர்சித்தனர். இது பலரது மத்தியில் பேசு பொருளானது.
இந்நிலையில் அக்சர் படேல் 3-வது வரிசையில் களமிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து திலக் வர்மா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அக்சர் படேலை பொறுத்தவரை 3-வது இடத்தில் அவர் களமிறங்குவது இது ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் இதேபோன்று 3-வது இடத்தில் இறங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் அவரால் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட முடியாதது குறித்து பெரியதாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நிச்சயம் அவராலும் அந்த இடத்தில் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறினார்.






