ரஞ்சியில் விளையாட முடிவெடுத்துவிட்டு திடீரென ஓய்வு அறிவித்தது ஏன்..? புஜாரா விளக்கம்


ரஞ்சியில் விளையாட முடிவெடுத்துவிட்டு திடீரென ஓய்வு அறிவித்தது ஏன்..? புஜாரா விளக்கம்
x

image courtesy:ICC

இந்திய முன்னணி வீரரான புஜாரா கிரிக்கெட்டில் இருந்து நேற்று விடை பெற்றார்.

மும்பை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ‘சுவர்’ என்று அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். இடையில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இனி இந்திய அணியில் தனக்கும் மறுபிரவேச வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி உள்ளார். டெஸ்டை தவிர்த்து அவர் 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காகவும் ஆடியுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென முடிவை மாற்றிய அவர் நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

இந்நிலையில் ஓய்வு முடிவிற்கான காரணம் குறித்து புஜாரா தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், "ஓய்வு குறித்து நான் முன்னதாக நினைக்கவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக நான் விடை பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். அந்த முடிவை எடுத்தபோது அது எனக்கும் என்னுடைய மொத்த குடும்பத்திற்கும் பெருமையானதாக இருந்தது. இந்த நாளில், எனது அணி நண்பர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைத்து ஆதரவு ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன், ஏனெனில் இது எனக்கு ஒரு பெருமைமிக்க தருணம்.

இந்திய அணிக்காக விளையாடுவது, சிறு வயதில் இருந்தே எனது கனவாக இருந்தது. அந்த கனவு நிறைவேறியது. இந்தியாவுக்காக விளையாடி என் கெரியரில் நிறைய பெருமையானத் தருணங்களை உருவாக்கியுள்ளேன். ஓய்வு என்பது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதை சரியான நேரத்தில் நான் எடுத்துள்ளேன்

குறிப்பாக இளம் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற வேண்டும் என்று நினைத்தேன். முதலில் இந்த ரஞ்சி சீசனில் விளையாடலாம் என்று நினைத்தேன், ஆனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் விரைவில் தயாராகுவார்கள் என்று உணர்ந்தேன். எனவே இது எனது தனிப்பட்ட முடிவு. கடந்த சில ஆண்டுகளாக நான் இந்திய அணியில் இல்லாதபோது, அதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

எனக்கு இது மிகவும் நினைவு மிக்க நாள், இந்திய அணியுடனான பயணம், நாங்கள் ஆடிய போட்டிகள் மற்றும் தொடர்கள், அணியின் செயல்பாடுகள், இவை அனைத்தும் எனக்கு மிகவும் முக்கியமானவை. உண்மையில் இன்று ஒரு பெருமைமிக்க தருணம், மகிழ்ச்சியான நாள். இவ்வளவு ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது வாழ்க்கையில் 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டன, அவற்றிலிருந்து மீண்டு இவ்வளவு ஆண்டுகள் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே இவ்வளவு ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story