ஸ்ரேயாஸ் அய்யரை வாங்கியது ஏன்...? - விளக்கம் அளித்த ரிக்கி பாண்டிங்

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர் படைத்துள்ளார்.
image courtesy: twitter/@PunjabKingsIPL
image courtesy: twitter/@PunjabKingsIPL
Published on

ஜெட்டா,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.

ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யருக்கு எதிர்பார்த்ததைப் போலவே ஏலத்தில் கடும் கிராக்கி காணப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர் படைத்துள்ளார். இந்நிலையில், ஸ்ரேயாஸ் அய்யரை வாங்கியது ஏன் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்கு ஒன்று கிடைக்காமல் மற்றொன்று கிடைத்திருக்கிறது. நான் ரிஷப் பண்ட் பற்றி கூறுகிறேன். ரிஷப் பண்ட் மதிப்பு என்ன என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

விளையாட்டின் மதிப்போடு ஒரு அணிக்கு அவரது மதிப்பு நன்றாக தெரியும். அவர் ஒரு ஆற்றல் மிக்க வீரர். அவர் விளையாட்டை நேசிக்கக் கூடிய ஒரு இயற்கையான வெற்றியாளர். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யரோடு நான் கடந்த காலத்தில் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். அவர் ஐபிஎல்லில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அவருடன் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நிச்சயமாக அவர் கடந்த சீசனில் ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்ற ஒரு கேப்டனாக இருக்கிறார்.

எனவே அந்த வகையில் சிந்தித்தால் ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்று தரக்கூடிய ஒரு வீரரை நாங்கள் பெற்றிருக்கிறோம். கேப்டன் பொறுப்பு குறித்து அவரிடம் இன்னும் நான் பேசவில்லை. ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்பாக அவரது தொலைபேசிக்கு முயற்சி செய்தேன், ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com