

மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகளிடம் தோல்வியை தழுவியது. அடுத்து டெல்லி, கொல்கத்தா அணிகளை வென்றது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இந்த சீசனில் முன்னாள் கேப்டன் தோனி இதுவரை ஒரு ஆட்டத்திலும் களமிறங்கவில்லை.
முன்னதாக நடப்பு சீசனுக்கு முந்தைய பயிற்சியின்போது கால் தசைப்பிடிப்பால் தோனி பாதிக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் வழக்கம் போல் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா? என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தோனி களம் இறங்க முழுமையாக தயாராக இருக்கும் பட்சத்தில், அவரும், மருத்துவ கமிட்டியும் இணைந்து, இன்று அது குறித்த முடிவை எடுப்பார்கள் என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமோன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோனி விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தோனி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அணிக்கு திரும்புவதற்கு அவர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், போட்டியில் விளையாடுவது குறித்த இறுதி முடிவை தோனியே எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.