ஐபிஎல் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
image courtesy: Chennai Super Kings/@ChennaiIPL
image courtesy: Chennai Super Kings/@ChennaiIPL
Published on

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். ஆனால் பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இது வரை களம் இறங்கவில்லை. ஆனால் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் களம் காண்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ரசிகர்களும் அவரது ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் வழக்கம் போல் ஏமாற்றமே மிஞ்சியது. 'டாஸ்' போடுவதற்கு முன்பாக பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ், போட்டியில் ஆடும் அளவுக்கு போதுமான உடல்தகுதியை டோனி எட்டவில்லை' என்று கூறி விட்டார். இருப்பினும் 44 வயதான டோனி மைதானத்திற்கு வந்து வீரர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். சென்னை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளதால் அந்த போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகம்தான். இதனால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது; அது அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்து நிறைய பேச்சுகள் நடந்து வருவது எனக்கு தெரியும். தோனி இந்த ஆண்டு முழுவதும் அணியுடன் இருந்து வந்துள்ளார். அது அணிக்கும், குறிப்பாக இளம் வீரர்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அவர் விளையாடவில்லை என்றாலும், அணியில் அவரது தாக்கம் மிகப்பெரியதாகவே இருந்தது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com