

ஐதராபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான், சென்னை, டெல்லி, மும்பை அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்தது.
முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் பணிந்தது. ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 440 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (4 அரைசதத்துடன் 425), இஷான் கிஷன் (3 அரைசதத்துடன் 354), டிராவிஸ் ஹெட் (2 அரைசதத்துடன் 323), நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி வீரர்களுக்கு குறைவில்லை. பந்து வீச்சில் இஷான் மலிங்கா (15 விக்கெட்டுகள்), சகிப் ஹூசைன், ஹர்ஷ் துபே, பிரபுல் ஹிங்கே, கம்மின்ஸ் வலுசேர்க்கின்றனர்.
பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (கொல்கத்தா அணிக்கு எதிராக), 2 தோல்வி (ராஜஸ்தான், குஜராத் அணிகளுக்கு எதிராக) என 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அந்த அணி கடைசி இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து சற்று சுணக்கம் கண்டுள்ளது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (4 அரைசதத்துடன் 361 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (4 அரைசதத்துடன் 328), பிரியான்ஷ் ஆர்யா (2 அரைசதத்துடன் 285), கூப்பர் கனோலி (2 அரைசதத்துடன் 270), ஸ்டோனிஸ் கலக்குகிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (10 விக்கெட்),விஜய்கு மார் வைஷாக், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், சேவியர் பார்லெட் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப்பிடம் மோதி அதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி, அதற்கு பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் ஐதராபாத்தும், 8-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, சலில் அரோரா, கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், ஹர்ஷல் பட்டேல், இஷான் மலிங்கா, சகிப் ஹூசைன்.
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கனோலி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, சூர்யான்ஷ் ஷெட்கே, மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ யான்சென், சேவியர் பார்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.