'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்குமா பஞ்சாப் அணி..? மும்பை அணியுடன் இன்று மோதல்

மும்பையில் தனியாக பயிற்சி எடுத்து வரும் ஹர்திக் பாண்ட்யா இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
 'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்குமா பஞ்சாப் அணி..? மும்பை அணியுடன் இன்று மோதல்
Published on

தர்சாலா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி (குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (ராஜஸ்தான், குஜராத், ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக) 13 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக உதை வாங்கி தடுமாறுகிறது. இதில் 2 ஆட்டங்களில் 210 ரன்னுக்கு மேலான இலக்கை நிர்ணயித்தும் அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது. 'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்க அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் குறைந்தது இரண்டில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்புவதே அணியின் சறுக்கலுக்கு காரணம் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். அந்த பிரச்சினையை சரிசெய்து வெற்றிப்பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் இறங்கும்.

மும்பை அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (கொல்கத்தா, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 8 தோல்வி கண்டு 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. பெங்களூருவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி பந்தில் வீழ்ந்ததன் மூலம் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் பரிதாபமான நிலையில் இருக்கும் அந்த அணி 9-வது இடத்தில் இருக்கிறது.

இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் மும்பை அணி வரும் ஆட்டங்களில் அழுத்தமின்றி ஆடி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து ஆறுதல் வெற்றி பெறுவதுடன் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண முயற்சிக்கும்.

மும்பை அணியில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காயம் காரணமாக 3 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இன்னும் அணியினருடன் இணையவில்லை. மும்பையில் தனியாக பயிற்சி எடுத்து வரும் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது உறுதி செய்யப்ப டவில்லை. ஹர்திக் பாண்ட்யா களம் திரும்பாவிட்டால் சூர்யகுமார் அணியை வழிநடத்துவார்.

பஞ்சாப் அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், மும்பை அணிக்கு எதிரான ஆதிக்கத்தை தொடரவும் ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 18 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 17 ஆட்டங்களில் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

பஞ்சாப்:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப் டன்), கூப்பர் கனோலி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், சூர்யான்ஷ் ஷெட்கே, மார்கோ யான்சென், பென் துவார்ஷூஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், யாஷ் தாக்குர்.

மும்பை:

ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, நமன்திர், சூர்யகுமார் யாதவ் (பொறுப்பு கேப்டன்), திலக் வர்மா, வில் ஜாக்ஸ், ராஜ் பாவா, கார்பின் பாஷ், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, கசன்பார், ரகு ஷர்மா அல்லது கிரிஷ் பகத்.

X

Daily Thanthi
www.dailythanthi.com