20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? - ஐ.சி.சி. விளக்கம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதற்கு ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? - ஐ.சி.சி. விளக்கம்
Published on

மும்பை.

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனது எல்லைகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை மூடுவதாக ஆஸ்திரேலியா அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதனால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? அல்லது தள்ளிப்போகுமோ? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிதானத்தை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் நிலைமையை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி முடிவு எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-

தற்போது சூழ்நிலை நன்றாக இல்லை. இப்போது இருக்கும் நிலைமை சீரடைய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும். எனவே நாம் இந்த விஷயத்தில் முன்கூட்டியே முடிவு எடுக்க முடியாது. முன்கூட்டியே முடிவு எடுத்து பின்னர் நிலைமை விரைவில் சீரடைந்தால் அவசரப்பட்டு விட்டோம் என்று வருந்தும் நிலை ஏற்படலாம். எனவே அவசரப்பட்டு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து இறுதி முடிவு எடுக்க ஆகஸ்டு மாதம் கடைசி வரை ஐ.சி.சி. காத்து இருக்கும். அதற்கு முன்பு எந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

தற்போது, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை குறிப்பிட்ட தேதியில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக போட்டி அமைப்பாளர்கள் ஆஸ்திரேலியாவில் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஆயத்த பணிகளை முழுவீச்சாக செயல்படுத்துவார்கள். நிலையற்ற தன்மை நிலவும் இந்த தருணத்தில் வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகினரின் நலனையும் பாதுகாக்க வேண்டியதே எங்களது முதன்மையான பொறுப்பாகும். அடுத்து நடைபெறும் எங்களது பணிகள் அனைத்திலும் பாதுகாப்பு அணுகுமுறை இடம் பெறும் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகிகள் கமிட்டி கூட்டம் வீடியோகான்பரன்ஸ் மூலம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பல போட்டி தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் வகையில் வருங்கால போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com