ஹர்பஜன்சிங் அறைந்த வீடியோ காட்சியை வெளியிடுவதா? ஸ்ரீசாந்த் மனைவி ஆவேசம்

17 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பார் போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக வெளியிட்டுள்ள பதிவில்,
‘லலித் மோடி, மைக்கேல் கிளார்க் உங்களது செயல் மிகவும் கேவலமாக இருக்கிறது. உங்களது சுய விளம்பரத்துக்காகவும், பார்ப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் 2008-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை இப்போது மீண்டும் இழுத்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் இருந்து ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங் ஆகியோர் மீண்டு வந்து விட்டனர். தற்போது அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் நீங்கள் அந்த பழைய காயத்தை கிளறி மீண்டும் வேதனைப்படுத்த பார்க்கிறீர்கள். இது அருவருக்கத்தக்க மனிதாபிமானமற்ற செயலாகும்.
ஸ்ரீசாந்த் பல கஷ்டங்களுக்கு பிறகு தனது வாழ்க்கையை மீண்டும் கண்ணியத்துடன் தொடங்கி இருக்கிறார். அவரது மனைவியாக இந்த விஷயத்தை மீண்டும் சந்திப்பது மிகவும் வலியை ஏற்படுத்துகிறது. இது வீரர்களை மட்டுமின்றி அவர்களது அப்பாவி குழந்தைகளையும் பாதிக்கும். மனிதாபிமானமற்ற உங்களது மலிவான இந்த செயலுக்கு வழக்கு தொடரலாம். உங்களது சுய நலத்துக்காக குடும்பங்களையும், அப்பாவி குழந்தைகளையும் காயப்படுத்துவதற்கு முன்பாக கடவுளுக்கு பயப்படுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.






