பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை
Published on

சிட்னி,

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏ பிரிவில் 4 முறை சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுகட்டுகின்றன.

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26-ல் வெற்றி பெற்றதே அவர்களின் வலிமைக்கு சான்று. சமீபத்தில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஜெஸ் ஜோனசென், அலிசா ஹீலி, மெக் லானிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தவிர உள்ளூர் சூழல் அந்த அணி வீராங்கனைகளுக்கு அனுகூலமாக இருக்கும்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இந்திய மங்கைகள் ஆயத்தமாகியுள்ளனர். முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 35 பந்துகளில் 41 ரன் தேவை என்ற நிலையில் நெருங்கி வந்து கோட்டை விட்டது. இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ரன் இலக்கை சேசிங் செய்து அசத்தியது நினைவிருக்கலாம்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமைத்து தருகிறார்கள். ஆனால் மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை தான் இந்தியா மலைபோல் நம்பி இருக்கிறது. அவர் சீக்கிரம் வெளியேறினால், நிலைமை கந்தலாகி விடுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பந்து வீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com