

சிட்னி,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடந்தது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது. ஜார்ஜியா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. ஷபாலி வர்மா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். மந்தனாவும், ஜெமிமாவும் பேட்டிங் செய்துகொண்டிருந்தனர். இந்திய அணி 5.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மந்தனா 16 ரன்னிலும், ஜெமிமா 9 ரன்னிலும் களத்தில் இருந்தனர். ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. இதனால் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து நடுவர்கள் டி.எல். விதியை கடைப்பிடித்தனர். அப்போது, டி.எல். விதிப்படி இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.