மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தின் சாதனையை சமன் செய்த இந்தியா

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மந்தனா 116 ரன்களும், ஹர்லீன் தியோல் 47 ரன்களும் அடித்தனர். இலங்கை தராப்பில் மல்கி மதாரா, விஹாங்கா மற்றும் சுகன்ந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 48.2 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 300+ ரன்களை அடித்ததன் மூலம் நியூசிலாந்தின் சாதனை ஒன்றை இந்திய மகளிர் அணி சமன் செய்துள்ளது. அதன்படி, இந்திய மகளிர் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் 4-வது முறையாக 300 ரன்களை கடந்திருக்கிறது. ஓராண்டில் அதிக முறை 300-க்கு மேல் ரன்கள் சேர்த்த நியூசிலாந்தின் (2018-ம் ஆண்டில் 4 முறை) சாதனையை சமன் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com