மகளிர் பிரீமியர் லீக்; களத்தில் மோதிக்கொண்ட ஹர்மன்ப்ரீத், எக்லஸ்டோன் - வீடியோ

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
லக்னோ,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தீப்தி ஷர்மா தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதியது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 55 ரன் எடுத்தார்.
மும்பை அணியில் அமெலியா கெர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக இந்த ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாககடைசி ஓவரில் 3 பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிற்க (பீல்டிங்) வேண்டும் என நடுவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவரத்தை மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரிடம் நடுவர் தெரிவித்து கொண்டிருந்தார். இது தொடர்பாக நடுவர் மற்றும் ஹர்மன்ப்ரீத் பேசி கொண்டிருந்தனர். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சோபி எல்லஸ்டோன் நடுவரிடம், ஹர்மன்ப்ரீத்தை காண்பித்து ஏதோ கூறினார். உடனே இதற்கு பதிலடியாக ஹர்மன்ப்ரீத் கவுர் அவரை பார்த்து ஏதோ திட்டினார்.
இதையடுத்து களநடுவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






