பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
x

இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

நாட்டிங்காம்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளநிலையில், அங்கு ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று இரவு 7 மணிக்கு (சனிக்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு அரங்கேறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களை தயார்படுத்த இந்திய அணிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா, மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், சினே ராணா, அமன்ஜோத் கவுர் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

நாட் சிவெர் புரூன்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அமி ஜோன்ஸ், டாமி பிமோன்ட், டானி வியாட், சோபி எக்லெஸ்டோன், இஸ்சி வோங், அலிஸ் கேப்சி, சோபியா டுங்லி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த தொடருக்கு முன்னதாக நடந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அணிக்கு எதிரான 50 ஓவர் மற்றும் 20 ஓவர் பயிற்சி ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி, அதனை மறந்து இந்த ஆண்டில் கால்பதிக்கும் தங்களது முதலாவது 20 ஓவர் போட்டியான இதனை வெற்றியோடு தொடங்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் வலுவான இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தொடர வலுவாக களமிறங்கும் என்று தெரிகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 30 முறை மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து 22 ஆட்டங்களிலும், இந்தியா 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

1 More update

Next Story