

விலோமூர் பார்க்,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான லாரா வோல்வார்ட், அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 92 ரன்கள் விளாசினார். மற்ற ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான ஷபாலி வர்மா 4 ரன்னிலும், ஜெமினா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சில் இந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது. பார்தி அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன், 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.