மகளிர் டி20 தரவரிசை; ஷபாலி வர்மா முன்னேற்றம்

Image Courtesy: @ICC
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
துபாய்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருந்தன. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும், முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய அணி டி20 தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கி 10ம் இடத்தையும், டேனியல் வையட் ஹாட்ஜ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் பின் தங்கி 14-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதல் இடத்தில் தொடரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் ஒரு இடம் முன்னேறி 4-ம் இடத்தையும், லாரன் பெல் ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.






