

லண்டன்,
பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டித்தொடரில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குரூப் 1 பிரிவில் லண்டன் லார்ட்சில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க வீரர்களான ஸ்மிரிதி மந்தனா (38), ஷபாலி வர்மா (34) ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜெமிமாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆரம்ப முதலே ஹர்மன்ப்ரீத் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை பறக்க விட்ட அவர், 25 பந்தில் அரைசதம் விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் சேர்த்தது. ஹர்மன்ப்ரீத் 56 ரன்னும், ஜெமிமா 34 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.
171 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஜார்ஜியா வோல் (4) முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு, லிட்சிபீல்ட் (24), மூனி (22) ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்தனர். தொடர்ந்து, ஜோடி சேர்ந்த பெரி, கார்டனர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால், இந்தியாவின் வெற்றி மெல்ல மெல்ல கையை விட்டுச் சென்றது. இருவரும் 100 ரன்னுக்கு மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பெர்ரி 38 பந்தில் 56 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்ட்னர் 29 பந்துக்கு 53 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தத் தோல்வியால் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது இந்தியா. தென்னாப்ரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.