மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இடங்கள் அறிவிப்பு

Image Courtesy: @ICC
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
துபாய்,
ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 5-ம் தேதி இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் மூன்று இடங்களை ஐ.சி.சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கார்டிபில் உள்ள சோபியா கார்டன்ஸ், டெர்பி கவுன்ட்டி திடல் மற்றும் லோபாரோ பல்கலைக்கழகம் ஆகிய மூன்று இடங்களிலும் பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
24 நாள்கள் நடைபெறவுள்ள இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் 33 போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்று, இங்கிலாந்து முழுவதும் 7 இடங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு ஏற்கனவே 8 அணிகள் தங்களது இடங்களை உறுதி செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள 4 அணிகள் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






