மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
x

Image Courtesy: @ICC / @BCCIWomen

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.

கவுகாத்தி,

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.

இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும்.

சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியை கூட நெருங்கியதில்லை. தான் ஓய்வு பெறுவதற்குள் அரையிறுதியில் கால்பதித்து விட வேண்டும் என்பதே தனது கனவு என கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சமாரி அட்டப்பட்டு கூறியிருக்கிறார். போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

1 More update

Next Story