மகளிர் உலகக்கோப்பை: பரிசுத்தொகையை அறிவித்த ஐ.சி.சி... எத்தனை கோடி தெரியுமா..?

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
பெங்களூரு,
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ஏறக்குறைய ரூ 39.55 கோடியும், 2வது இடம்பெறும் அணிக்கு ரூ.19.77 கோடியும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ. 9.88 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






