உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

Image Courtesy: X (Twitter) / File Image
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது.
பர்மிங்காம்,
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் தொடக்க நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி, ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்சை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளும், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.






