இங்கிலாந்திடம் வீழ்ந்தது: இந்திய அணி முதல் தோல்வி - ரோகித் சர்மா சதம் ‘வீண்’

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்த போதிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இங்கிலாந்திடம் வீழ்ந்தது: இந்திய அணி முதல் தோல்வி - ரோகித் சர்மா சதம் ‘வீண்’
Published on

பர்மிங்காம்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் பர்மிங்காமில் நேற்று அரங்கேறிய 38-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, இந்தியாவுடன் மோதியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு பதிலாக இளம் புயல் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டார். விஜய் சங்கர் கால்பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஜாசன் ராய் மற்றும் பிளங்கெட் அணிக்கு திரும்பினர். ஜேம்ஸ் வின்ஸ், மொயீன் அலி கழற்றி விடப்பட்டனர்.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஜாசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இந்திய வீரர்கள் ஆரஞ்சு, நீலம் நிறம் கலந்த புதிய சீருடை அணிந்து பீல்டிங் செய்ய களம் கண்டனர்.

முதல் ஓவரிலேயே 2 பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய இருவரும் இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்து ரன்கள் சேர்த்தனர். ஜாசன் ராய் 21 ரன்னில் கண்டம் தப்பினார். ஹர்திக் பாண்ட்யா லெக்-சைடில் வீசிய பந்தை ஜாசன் ராய் அடித்த போது கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டது. இந்திய வீரர்கள் கேட்ச் கேட்டு முறையிட்ட போது நடுவர் மறுத்தார். அரைகுறை மனதில் இருந்த கேப்டன் கோலி டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்ய முன்வரவில்லை. ஆனால் டி.வி. ரீப்ளேயில் அது கேட்ச் என்பதை அறிந்ததும் இந்திய வீரர்கள் நொந்து போனார்கள். அடுத்த இரு பந்துகளில் ஜாசன் ராய் சிக்சரும், பவுண்டரியும் விரட்டி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவார்கள் என்று எதிர்பார்த்த இந்திய கேப்டன் கோலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இருவரது பந்துவீச்சையும் தெறிக்க விட்டனர். குறிப்பாக சாஹலை நையபுடைத்து எடுத்த பேர்ஸ்டோ அவரது பந்து வீச்சில் மட்டும் 4 சிக்சர்களை பறக்க விட்டார். அந்த அணி 15.3 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. வலுவான அஸ்திவாரம் உருவாக்கி தந்த இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 350 ரன்களை தாண்டும் போலவே தோன்றியது.

முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் (22.1 ஓவர்) திரட்டிய இந்த ஜோடி குல்தீப் யாதவின் சுழலில் பிரிந்தது. அவரது பந்து வீச்சில் ஜாசன் ராய் (66 ரன், 57 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர் ) தூக்கியடித்த போது மாற்று பீல்டர் ரவீந்திர ஜடேஜா பாய்ந்து அற்புதமாக கேட்ச் செய்தார். இதன் பின்னர் ஜோ ரூட் களம் புகுந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய பேர்ஸ்டோ ஒரு நாள் போட்டியில் 8-வது சதத்தை பூர்த்தி செய்தார். உலக கோப்பையில் அவரது கன்னி சதமாக இது அமைந்தது. ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்த போது பேர்ஸ்டோ 111 ரன்களில் (109 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார்.

பேர்ஸ்டோவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இங்கிலாந்தின் ரன்வேகத்தை முகமது ஷமியும், சுழற்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் கொஞ்சம் கட்டுப்படுத்தி ஆறுதல் அளித்தனர். 28-வது ஓவரில் இருந்து 37 ஓவர்கள் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. ரன்ரேட்டும் 6 ரன்களுக்கு கீழாக வந்தது. இதற்கிடையே மோர்கன் 1 ரன்னில், முகமது ஷமியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வந்ததும் இங்கிலாந்தின் ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. அவரும், ஜோ ரூட்டும் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஜோ ரூட் 44 ரன்னும், அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் 20 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். பென் ஸ்டோக்ஸ் தனது பங்குக்கு 79 ரன்கள் (54 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்தார். சாஹலின் பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் நொறுக்கிய நிலையில் கேதர் ஜாதவை பந்து வீச்சுக்கு கோலி அழைக்காதது ஆச்சரியம் அளித்தது.

50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதிலும், பும்ரா மட்டுமே பந்து வீச்சில் சிக்கனத்தை காட்டினார்.

பின்னர் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக துணை கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் லோகேஷ் ராகுல் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி இணைந்தார். இங்கிலாந்தின் எழுச்சியான பந்து வீச்சு இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தது. இருவரும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தியதால் ஸ்கோர் மந்தமானது. இந்தியா 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன் மட்டுமே எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 5 ஓவர்களில் 3 மெய்டனுடன் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மிரள வைத்தார்.

அதன் பிறகு இருவரும் படிப்படியாக ரன்வேகத்தை உயர்த்தினர். 22-வது ஓவரில் இந்தியா 100 ரன்களை கடந்தது. ஆனாலும் ரன்தேவை எகிறியதால் நெருக்கடியும் சூழ்ந்தது. ஸ்கோர் 146 ரன்களாக உயர்ந்த போது கோலி 66 ரன்களில் (76 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து ரிஷாப் பண்ட் வந்தார். மறுமுனையில் தனது 25-வது ஒரு நாள் போட்டி சதத்தை நிறைவு செய்த ரோகித் சர்மா 102 ரன்களில் (109 பந்து, 15 பவுண்டரி) வெளியேற, மேலும் சிக்கல் உண்டானது.

இதையடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா (45 ரன்) மற்றும் ரிஷாப் பண்ட் (32 ரன்) உள்ளிட்டோர் முடிந்தவரை துரிதம் காட்டினாலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. பந்து வீச்சில் சாதுர்யத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து பவுலர்கள் அவ்வப்போது வேகம் குறைந்த (ஸ்லோ) பந்துகளையும் வீசி திகைக்க வைத்தனர்.

50 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 42 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

8-வது ஆட்டத்தில் விளையாடி 5-வது வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டது. அதே நேரத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது தான் முதல் தோல்வியாகும்.

வரலாறு படைத்த கோலி

* இந்திய வீரர் ரோகித் சர்மா நேற்று எடுத்த 102 ரன்களையும் சேர்த்து இந்த உலக கோப்பையில் 3 சதங்கள் (ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன், பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்) அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்களின் வரிசையில் சங்கக்கராவுக்கு (4 சதம்) அடுத்து ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், மார்க் வாக், இந்தியாவின் சவுரவ் கங்குலி (இவர்கள் தலா 3 சதம்) ஆகியோருடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

* இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் அரைசதம் அடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

ஷமி சாதனை; சாஹல் வேதனை

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர்களில் 6 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 88 ரன்களை தாரை வார்த்தார். ஒரு நாள் போட்டியில் அவரது மோசமான பந்து வீச்சு இதுவாகும். அது மட்டுமின்றி உலக கோப்பையில் அதிக ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர் என்ற சோகமும் அவரது வசம் ஒட்டிக் கொண்டது. இதற்கு முன்பு ஸ்ரீநாத் 2003-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 87 ரன்களை வழங்கியதே இந்த வகையில் மோசமானதாக இருந்தது.

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முந்தைய இரு ஆட்டங்களில் தலா 4 விக்கெட்டுகளை (4-40, 4-16) வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். இதன் மூலம் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 4 விக்கெட் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

* இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ-ஜாசன் ராய் கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து அசத்தியது. உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்கள் இது தான். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ்- காளிசரன் இணை முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது 1992-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

லோகேஷ் ராகுல் காயம்

இ ங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தாவி குதித்து பிடிக்க முயற்சித்தார். பந்து அவரது கையில் சிக்காமல் சிக்சராக மாறியது. அதே சமயம் பின்வாக்கில் கீழே விழுந்ததில் இடுப்பு பகுதி மைதானத்தில் இடித்து காயம் ஏற்பட்டது. வலியுடன் வெளியேறிய ராகுல் சிகிச்சை பெற்றார். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா பீல்டிங் செய்தார். இதன் பின்னர் காயத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்த லோகேஷ் ராகுலால் இயல்பாக செயல்பட முடிவில்லை. 9 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றி ஆட்டம் இழந்தார். அனேகமாக அவர் அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாது என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com