உலகக்கோப்பை கிரிக்கெட்; புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்தியா...!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலகக்கோப்பை கிரிக்கெட்; புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்தியா...!
Published on

ஆமதாபாத்,

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் ஆசம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் களம் புகுந்தனர். இதில் கில்16 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த கோலி 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய வெற்றி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா பெற்ற 3வது வெற்றியாகும். இந்திய அணி 3 ஆட்டங்களில் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் 117 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி இலக்கை எட்டிப்பிடித்ததால் இந்தியாவின் நெட் ரன் ரேட் அதிகமானது.

இதன் காரணமாக இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் நியூசிலாந்து (3 ஆட்டத்தில் 3 வெற்றி) அணியும், 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா (2 ஆட்டத்தில் 2 வெற்றி) அணியும், 4வது இடத்தில் பாகிஸ்தான் (3 ஆட்டத்தில் 2 வெற்றி) அணியும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com