உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 7-வது வெற்றி - இலங்கையை எளிதில் வீழ்த்தியது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 7-வது வெற்றி - இலங்கையை எளிதில் வீழ்த்தியது
Published on

லீட்ஸ்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் லீட்சில் நேற்று நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா-இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டது. யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமிக்கு பதிலாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். இலங்கை அணியில் ஒரு மாற்றமாக வாண்டர்சேவுக்கு பதிலாக திசரா பெரேரா இடம் பெற்றார்.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணாரத்னே, குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினார்கள். இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 3-வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த கருணாரத்னே (10 ரன்) அடுத்த ஓவரில் பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

குசல் பெரேரா 7 ரன்னில் இருக்கையில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். அவர் அடித்த பந்தை ஒரே நேரத்தில் குல்தீப் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் பிடிக்க முயன்று கோட்டை விட்டனர். தனக்கு கிடைத்த வாய்ப்பை குசல் பெரேரா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அடுத்த சில ஓவர்களில் குசல் பெரேரா (18 ரன்) பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த குசல் மென்டிஸ் (3 ரன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பெர்னாண்டோ (20 ரன்) ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 11.4 ஓவர்களில் இலங்கை அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு திரிமன்னே, மேத்யூஸ்சுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியை ஆரம்ப சரிவில் இருந்து மீட்டனர். மேத்யூஸ்சை தொடர்ந்து திரிமன்னேவும் அரைசதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 37.5 ஓவர்களில் 179 ரன்னாக உயர்ந்த போது திரிமன்னே (53 ரன்கள், 68 பந்து, 4 பவுண்டரி) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ், திரிமன்னே இணை 124 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா, மேத்யூஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் 2 சிக்சர் விளாசிய மேத்யூஸ் 61 ரன்னில் இருக்கையில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்ட மேத்யூஸ் 115 பந்துகளில் சதத்தை எட்டினார். ஒரு நாள் போட்டியில் மேத்யூஸ் அடித்த 3-வது சதம் இதுவாகும். உலக கோப்பையில் அவருக்கு இது முதல் சதமாகும். மேத்யூஸ் தனது 3 சதத்தையும் இந்தியாவுக்கு எதிராகவே அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் ஸ்கோர் 253 ரன்னை எட்டிய போது மேத்யூஸ் (113 ரன்கள், 128 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) பும்ரா பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த திசரா பெரேரா (2 ரன்) வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து திரும்பினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்னுடனும், இசுரு உதனா 1 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ரோகித் சர்மா 92 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 27-வது சதம் இதுவாகும். இந்த உலக கோப்பையில் அவர் அடித்த 5-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் ஸ்கோர் 30.1 ஓவர்களில் 189 ரன்னாக இருந்த போது ரோகித் சர்மா (103 ரன்கள், 94 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) ரஜிதா பந்து வீச்சில் மேத்யூஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல் 109 பந்துகளில் சதத்தை கடந்தார். ஒரு நாள் போட்டியில் லோகேஷ் ராகுல் அடித்த 2-வது சதம் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. லோகேஷ் ராகுல் 118 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 111 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷாப் பண்ட் (4 ரன்) இசுரு உதனா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

43.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். கேப்டன் விராட்கோலி 34 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் மலிங்கா, ரஜிதா, இசுரு உதனா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். சதம் அடித்த இந்திய வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com