உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: சூப்பர்சிக்ஸ் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தியது ஜிம்பாப்வே

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றின் சூப்பர்சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 14 ரன் வித்தியாசத்தில் ஓமனை போராடி வென்றது.
Image Courtesy : @ZimCricketv twitter
Image Courtesy : @ZimCricketv twitter
Published on

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிசுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-3 இடங்களை பிடித்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'பி' பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.

சூப்பர்சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது எதிர்பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் தங்கள் பிரிவில் இருந்து வந்த அணிகளை ஏற்கனவே லீக்கில் வீழ்த்தி இருந்தால் அதற்குரிய புள்ளி சூப்பர்சிக்ஸ் சுற்றில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த வகையில் ஜிம்பாப்வே, இலங்கை தலா 4 புள்ளிகளுடன் சூப்பர்சிக்சை கம்பீரமாக அடைந்து இருக்கின்றன. சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியை எட்டுவதுடன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் தகுதி பெறும்.

இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று தொடங்கியது. புலவாயோவில் நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்பே- ஓமன் அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் கப்டன் கிரேக் எர்வின் (25 ரன்), ஜாய்லார்டு கும்பி (21 ரன்) ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். இதைத் தொடர்ந்து 3-வது வரிசையில் அடியெடுத்து வைத்த சீன் வில்லியம்ஸ் அதிரடியில் வெளுத்து வாங்கினார். கடந்த ஆட்டத்தில் 174 ரன்கள் குவித்த வில்லியம்ஸ் இந்த ஆட்டத்திலும் சதம் அடித்து உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இது அவரது 8-வது சதமாகும். அவருக்கு சிகந்தர் ராசா (42 ரன்) நன்கு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய சீன் வில்லியம்ஸ் 142 ரன்களில் (103 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஓமனுக்கு எதிராக ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

50 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. லுக் ஜோங்வி 43 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் 333 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் வீரர்களும் சூப்பராக விளையாடி ஜிம்பாப்வேயை மிரள வைத்தனர். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் காஷ்யப் பிரஜாபதி நிலைத்து நின்று சதம் விளாசியதோடு, 103 ரன்களில் (97 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். பிரஜாபதி குஜராத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அகிப் இலியாஸ் (45 ரன்), அயான் கான் (47 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை வழங்கினர்.

ஆனால் கடைசி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை தாரை வார்த்ததால் நெருங்கி வந்து ஓமன் தோற்று போனது. அத்துடன் கேப்டன் ஜீஷன் மசூத் (37 ரன்) காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறியது அவர்களின் உத்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. கடைசி பகுதியில் அவர் மீண்டும் களம் இறங்கி ஆடினாலும் பலன் இல்லை. அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே 'திரில்' வெற்றியை ருசித்தது. இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை-நெதர்லாந்து அணிகள் (பகல் 12.30 மணி) மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com