உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இலங்கை அணி 3-வது வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 23 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இலங்கை அணி 3-வது வெற்றி
Published on

செஸ்டர்-லீ-ஸ்டிரிட்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணாரத்னே, குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினார்கள். கருணாரத்னே நிதானமாக ஆட மறுமுனையில் குசல் பெரேரா அடித்து ஆடினார்.

அணியின் ஸ்கோர் 93 ரன்னாக உயர்ந்த போது கருணாரத்னே (32 ரன்) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ அருமையாக ஆடினார். 17.3 ஓவர்களில் இலங்கை அணி 100 ரன்னை எட்டியது. அடித்து ஆடிய குசல் பெரேரா 51 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களம் கண்ட குசல் மென்டிஸ் 39 ரன்னும், மேத்யூஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய அவிஷ்கா பெர்னாண்டோ 100 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

45.3 ஓவர்களில் அந்த அணி 300 ரன்னை கடந்தது. அணியின் ஸ்கோர் 47.2 ஓவர்களில் 314 ரன்னை எட்டிய போது அவிஷ்கா பெர்னாண்டோ (104 ரன்கள், 103 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஷெல்டர் காட்ரெல் பந்து வீச்சில் பாபியன் ஆலெனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த இசுரு உதனா (3 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. இந்த உலக கோப்பையில் இலங்கை அணி 300 ரன்னை தாண்டுவது இதுவே முதல்முறையாகும். திரிமன்னே 45 ரன்னுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 6 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 5-வது வீரராக களம் கண்ட நிகோலஸ் பூரன் நிலைத்து நின்று அடித்து ஆடி இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். அவருக்கு பக்கபலமாக இருந்த பாபியன் ஆலென் (51 ரன்கள், 32 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்து முதல் சதம் அடித்து மிரட்டிய நிகோலஸ் பூரன் (118 ரன்கள், 103 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) மேத்யூஸ் பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களே எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ரன் வித்தியாசத்தில் தனது 3-வது வெற்றியை ருசித்தது. நிகோலஸ் பூரன் சதம் வீணானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com