

மான்செஸ்டர்,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 45-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் மார்க்ரம் மற்றும் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை தந்த இந்த ஜோடியில், மார்க்ரம் 34(37) ரன்களும், தனது அரைசதத்தை பூர்த்தி செய்த டி காக் 52(51) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேப்டன் டூ பிளஸ்சிஸ் மற்றும் ரசி வாண்டர் டூசன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேப்டன் டூ பிளஸ்சிஸ் தனது சதத்தை பதிவு செய்தநிலையில் 100(94) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய டூமினி 14(13) ரன்களும், பிரிட்டோரிஸ் 2(5) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் சிறப்பாக ஆடிய ரசி வாண்டர் டூசன், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95(97) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் பெலக்வாயோ 4(3) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக லியான் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் பெஹண்ட்ரோப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.