2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து பறிக்கும் எண்ணம் இல்லை ஐ.சி.சி. தகவல்

2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையும், 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையும் நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது.
2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து பறிக்கும் எண்ணம் இல்லை ஐ.சி.சி. தகவல்
Published on

புதுடெல்லி,

ஐ.சி.சி. போட்டிகளுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க மறுக்கும் விவகாரத்தில் இவ்விரு போட்டிகளையும் நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளுக்கு வரி விலக்கு பெறுவது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ஐ.சி.சி. ஈட்டும் ஒவ்வொரு துளி வருவாயும் திருப்பி விளையாட்டுக்கு தான் செலவிடப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, அதிக வருவாய் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு உதவுகிறோம். இவ்விரு போட்டிகளையும் இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். போட்டிக்கு நிச்சயம் வரி விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு இன்னும் போதிய காலஅவகாசம் உள்ளது. இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்.

2016-ம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்த போது அந்த போட்டியில் கிடைக்கும் வருவாய்க்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டு தொகையாக ரூ.161 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com