எங்கள் இதயத்தில் இருந்து ஓய்வு பெற முடியாது; தோனிக்கு பாகிஸ்தான் ரசிகர் புகழாரம்

எங்களுடைய இதயங்களில் இருந்து ஓய்வு பெற முடியாது என்று கூறி தோனிக்கு பாகிஸ்தான் ரசிகர் புகழாரம் தெரிவித்துள்ளார்.
எங்கள் இதயத்தில் இருந்து ஓய்வு பெற முடியாது; தோனிக்கு பாகிஸ்தான் ரசிகர் புகழாரம்
Published on

அபோதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்பட்ட எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். இதனால் அவரது ஓய்வு பற்றி நீண்ட காலம் இருந்து வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் ஏராளம். 7.29 மணியில் இருந்து (நேற்று) என்னை ஓய்வு பெற்றவராக நினைத்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பினால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்து உள்ளனர். அவருக்கு பல்வேறு பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் மற்றும் பிரபலங்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்தியா தவிர்த்து அடில் தாஜ் என்ற பாகிஸ்தானிய ரசிகர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில், அன்பிற்குரிய தோனி அவர்களே. நீங்கள் ஒரு சில நிமிடங்களே வந்து செல்லும் கவிஞர் அல்ல. நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் கிரிக்கெட் வீரர். நீங்கள் குறிப்பிடத்த புகழ் வாய்ந்தவர். எங்களது நாயகன். எங்களுடைய இதயங்களில் இருந்து நீங்கள் ஓய்வு பெற முடியாது என்று தாஜ் தெரிவித்து உள்ளார்.

தோனியின் ரசிகனாக ஆவதற்கும், அவரை அதிகம் விரும்புவதற்கும் உரிய காரணங்களை பற்றி தாஜ் கூறும்பொழுது, நம்பகத்திற்குரிய விளையாட்டு வீரர் அல்லது நல்ல கேப்டன் என்பதற்காக மட்டுமின்றி அனைவரையும் சம அளவில் வைத்து காண்பவர். பெரிய சாதனைகளை படைத்த பின்னரும், எதுவும் செய்து விடவில்லை என்பது போல் எளிமையாக செயல்படுபவர்.

அவர் மிக பெரிய மனிதர். பாகிஸ்தானில் அவரை பின்தொடரும் ரசிகர்கள் ஏராளம். எனது தந்தையும் அவரது தீவிர ரசிகர். துபாயில் தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்திற்கு நாங்கள் இருவரும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றோம். அவருடைய இடம் ஒருபோதும் மீண்டும் பூர்த்தி செய்யப்படாது என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகால எல்லை விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை பரம எதிரிகள் இருவருக்கு இடையே நடைபெறும் போராக, ரசிகர்கள் உன்னிப்புடன் கவனிக்கும் சூழல் மறுபுறம் இருக்க, இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு பாகிஸ்தானிய நாட்டில் இருந்து ரசிகராக ஒருவர் இருப்பது தோனிக்கு பெருமை சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com