7 வீரர்களின் கெரியரை நீங்கள் அழித்து விட்டீர்கள் - இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த யோக்ராஜ் சிங்


7 வீரர்களின் கெரியரை நீங்கள் அழித்து விட்டீர்கள் - இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த யோக்ராஜ் சிங்
x
தினத்தந்தி 16 Jun 2025 7:22 PM IST (Updated: 16 Jun 2025 7:25 PM IST)
t-max-icont-min-icon

2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்ததாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் உள்ளிட்ட 7 வீரர்களின் கெரியரை பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு அழித்து விட்டதாக முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2011-ஒருநாள் உலகக்கோப்பை வெற்றிக்குப்பின் இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டனர்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்தியா அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்தது. அதனால் அந்த காலகட்டத்தில் இருந்த முன்னணி வீரர்கள் கழற்றி விடப்பட்டு விராட் கோலி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 5 தொடர் தோல்விகளை சந்தித்ததாக முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதனால் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனியை நீக்குவதற்கு மொஹிந்தர் அமர்நாத் தலைமையிலான தேர்வுக்குழு முடிவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் (பி.சி.சி.ஐ. தேர்வாளர்கள்) எந்த காரணமும் இல்லாமல் இந்த வீரர்களின் கெரியரை அழித்தீர்கள். கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைப், விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட் போன்ற வீரர்களின் கெரியரை முடித்தீர்கள். 2011க்குப்பின் அவர்களை நீங்கள் செல்ல வைத்தீர்கள். 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை நீங்கள் அழித்தீர்கள். 7 வீரர்களின் வாழ்க்கை சாக்கடையில் தள்ளப்பட்டது.

அதனாலேயே நாம் தடுமாறி வருகிறோம். தோனி கேப்டனாக இருந்தபோது நாம் 5 தொடர்களை இழந்தோம். அதனால் தோனியை மாற்றப் போகிறோம் என்று அப்போதைய பயிற்சியாளர் குழுவில் இருந்த மோகிந்தர் அமர்நாத் சொன்னார். ஆனால் அது சரியான வழியல்ல" என்று கூறினார்.

ஆனால் அதை அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் என். ஸ்ரீனிவாசன் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story