இளையோர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்
துபாய்,
19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் மோதியது. மழையால் 20 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 138 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக சமிகா ஹீனாதிஹலா 42 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஆயுஷ் மாத்ரே (7 ரன்), வைபவ் சூர்யவன்ஷி (9 ரன்) 4-வது ஓவருக்குள் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஆரோன் ஜார்ஜ் (58 ரன், 49 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), துணை கேப்டன் விஹான் மல்கோத்ரா (61 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்து அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தனர். இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, பாகிஸ்தானுடன் மல்லுகட்டியது. மழையால் 27 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 26.3 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் அப்துல் சுபான் 4 விக்கெட் சாய்த்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சமீர் மின்ஹாஸ் 69 ரன்களுடன் (57 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக்கில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்தது நினைவு கூரத்தக்கது.






