

புதுடெல்லி,
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா தனது 60வது வயதில் மாரடைப்பினால் நேற்று காலமானார். முன்னதாக கடந்த மாதம் மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் மாரடோனா தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், டியாகோ மரடோனா கால்பந்தின் ஜாம்பவனாக இருந்தார். அவரது வாழ்க்கை முழுவதும், கால்பந்து மைதானத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்தார். அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்து பெருமை சேர்த்தவர் மாரடோனா. பார்சிலோனா, நபோலி அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் வெகு காலம் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் மாரடோனாவுக்கு ரசிகர்கள் உண்டு. பிரேசிலுக்கு பீலே, அர்ஜென்டினாவுக்கு மாரடோனா என கால்பந்து களத்தில் கொடிகட்டிப் பறந்தவர். மாரடோனாவின் மறைவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டுப் அதிபர் அல்பெர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.