ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: கடினமான பிரிவில் இந்திய அணி

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை நடக்கிறது.
image courtesy: ISL Media via ANI
image courtesy: ISL Media via ANI
Published on

தோகா,

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் எந்தெந்த பிரிவில் அங்கம் வகிக்கும் என்பதை முடிவு செய்வதற்கான குலுக்கல் (டிரா) தோகாவில் நேற்று நடந்தது.

இதன்படி மொத்த அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனும், போட்டியை நடத்தும் நாடுமான கத்தார் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சீனா, தஜிகிஸ்தான், லெபனான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி கடினமான 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன.

'சி' பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், பாலஸ்தீனமும், 'டி' பிரிவில் 4 முறை சாம்பியனான ஜப்பான், இந்தோனேஷியா, ஈராக், வியட்நாமும், 'இ' பிரிவில் தென்கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைனும், 'எப்' பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமனும் இடம் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பிடிக்கும் 4 சிறந்த அணிகள் 'ரவுண்ட் 16' சுற்றுக்கு தகுதி பெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com