ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்திய அணியின் வெற்றி தொடருமா? - ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதல்

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்திய அணியின் வெற்றி தொடருமா? - ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதல்
Published on

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

அபுதாபியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி (ஏ பிரிவு) போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில் 97-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை நொறுக்கியது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்து அசத்தினார். தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் பக்ரைனுடன் டிரா கண்டது.

இந்திய அணி முதல் ஆட்டத்தில் கிடைத்த பெரிய வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணும். இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். இதனால் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க இந்திய அணி கடுமையாக போராடும். அதேநேரத்தில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் முதல் வெற்றியை ருசிக்க ஐக்கிய அரபு அமீரக அணி தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐக்கிய அரபு அமீரக கால்பந்து சங்கம் உள்ளூர் ரசிகர்களுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க வாங்கி இருக்கிறது. எனவே உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக நடைபெறும் லீக் ஆட்டங்களில் பக்ரைன்-தாய்லாந்து (மாலை 4.30 மணி), ஜோர்டான்-சிரியா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே எப் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் ஜப்பான் 3-2 என்ற கோல் கணக்கில் துர்க்மெனிஸ்தானையும், உஸ்பெகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் ஓமனையும் வீழ்த்தின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com