சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தல்
Published on

துரின்,

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் யுவென்டஸ் (இத்தாலி)- அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் இடையிலான 2-வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் இத்தாலியின் துரின் நகரில் நடந்தது. குறைந்தது 3 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கிய யுவென்டஸ் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். 27-வது மற்றும் 48-வது நிமிடங்களில் தலையால் முட்டி கோல் போட்ட அவர் 86-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றினார். முடிவில் யுவென்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை தோற்கடித்தது. இரண்டு ஆட்டங்களின் முடிவின் அடிப்படையில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் யுவென்டஸ் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

ரசிகர்களின் ஆரவாரத்தையும், ரொனால்டோவின் அட்டகாசமான ஆட்டத்தையும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆனந்த கண்ணீர் விட்டார். அவர் கண்கலங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com