

ரஷ்யா,
கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா, ஜெர்மெனி, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்குபெற்றுள்ளன. இப்போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணியும் சிலி அணியும் மோதின. இரு அணி வீரர்களும் இறுதி போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் விளையாடினர். எதிர் அணி வீரர்களின் அனைத்து கோல் போடும் வாய்ப்புகளையும் இரு அணி வீரர்களும் தடுத்தனர். இதன் காரணமாக 90 நிமிட முடிவில் இரு அணியினரும் கோல் ஏதும் அடிக்காததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிலி அணியினர் முதல் மூன்று வாய்ப்பிலும் கோல் அடித்தனர். ஆனால் போர்ட்டுகல் அணியினரின் முதல் மூன்று கோல் போடும் வாய்ப்புகளையும் சிலி அணியின் கோல் கீப்பர் கிலாடியோ பிராவோ தடுத்தார். இதன் மூலம் சிலி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. சிலி அணியின் கோல் கீப்பர் பிராவோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிலி அணியுடன் இறுதி போட்டியில் மோதபோவது யார் என்பதை தீர்மானிக்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜெர்மெனியும் மெக்சிகோவும் இன்று மோதுகின்றன. இறுதி போட்டி வருகிற ஞாயிறு நடைபெற உள்ளது. மூன்றாம் இடத்திற்கான போட்டியும் அன்றே நடைபெற உள்ளது.