ஊக்கமருந்து விவகாரம்: உலகக்கோப்பை வென்ற கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

இவர் 2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

பாரிஸ்,

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் மற்றும் யுவென்டஸ் கிளப் அணி வீரர் பால் போக்பா கால்பந்து போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.

கடந்த செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு தீர்ப்பாயத்தால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது உறுதி செயப்பட்டு இருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியது குறித்து விசாரணை தொடங்கிய நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார்.

போக்பாவின் ஊக்கமருந்து மறு ஆய்வு சோதனை அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு அதிலும் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் பால் போக்பாவுக்கு 4 ஆண்டுகள் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com