கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி

சான்டோஸ் அணியுடனான அவருடைய ஒப்பந்தம் ஜூன் 30-ந்தேதி உடன் முடிவடைகிறது.
கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பிரேசிலியா,

பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை, சான்டோஸ் கால்பந்து அணி வெளியிட்ட அறிக்கை உறுதி செய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அவருக்கு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால், அணியின் அனைத்து வித நடவடிக்கைகளில் இருந்தும் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனை கடந்த சனிக்கிழமை மதியம் அணி நிர்வாகம் தெரிவித்தது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இதனால், அந்த அணிக்காக விளையாடுவதில் இருந்து அவர் மீண்டும் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார். சான்டோஸ் அணியுடனான அவருடைய ஒப்பந்தம் ஜூன் 30-ந்தேதி உடன் முடிவடைகிறது. அதன்பின்னர் அவர் அடுத்து எந்த அணிக்காக விளையாட உள்ளார் என்பது உறுதியாக தெரிய வரவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com