உலகக் கோப்பை கால்பந்து நாளை தொடக்கம்: புதிய விதிமுறைகள் அறிமுகம்

அணிகள் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து நாளை தொடக்கம்: புதிய விதிமுறைகள் அறிமுகம்
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அவை 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அணிகள் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன.

இந்த உலகக் கோப்பையில் சர்வ தேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சில புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது. புதிய விதிகளில் இடம் பெற் றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

* களத்தில் நடுவருடன் வாக்குவாதம் செய்யும் போதோ அல்லது சர்ச்சைக்குரிய நேரத்திலோ வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வீரர்கள் கையாலோ அல்லது பனியனாலோ வாயை மூடிக் கொண்டு திட்டினால் உடனே சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

* நடுவரின் முடிவை எதிர்த்து ஆட்டத்தை புறக்கணிக்கும் வகையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறும் வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டப்படும். அவர்களை இந்த மாதிரி போராட தூண்டும் அணி நிர்வாகிகளுக்கும் இது பொருந்தும்.

*கோல் கீப்பர் பந்தை பிடித்த பிறகு 8 வினாடிக்குள் அதை மீண்டும் ஆட்டத்திற்குள் விட வேண்டும்.

* ஒரு வீரரை மாற்றுவதற்கான 'சிக்னல்' கொடுக்கப்பட்டவுடன், அந்த வீரர் ஆடுகளத்தை விட்டு வெளியேற 10 வினாடிக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

* ஒரு வீரருக்கு களத்தில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் சிகிச்சை முடிந்த பிறகு அவர் கட்டாயமாக ஒரு நிமிடமாவது வெளியே இருக்க வேண்டும். ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகே அவர் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்.

* வீடியோ நடுவர் விதிமுறை (வி.ஏ.ஆர்.) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி தவறுதலாக 2-வது மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கும் போது அல்லது ஆள்மாறாட்டத்தால் வேறு வீரருக்கு அட்டை காட்டும் போது அதை சரிபார்க்கவும் இனி வி.ஏ.ஆர். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கார்னர் கிக்கை கள நடுவர் தவறுதலாக வழங்கும் பட்சத்தில் அதிலும் வி.ஏ.ஆர். தலையிட முடியும். இதனால் ஆட்டத்தின் முடிவையே மாற்றக்கூடிய தவறான முடிவுகள் தவிர்க்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com