உலகக் கோப்பை கால்பந்து நாளை தொடக்கம்: முக்கிய அணிகளின் பலம் என்ன ? ஒரு பார்வை

கடந்த உலகக் கோப்பையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா 3-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.
உலகக் கோப்பை கால்பந்து நாளை தொடக்கம்: முக்கிய அணிகளின் பலம் என்ன ? ஒரு பார்வை
Published on

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் விளையாட உள்ள முக்கிய அணிகளின் பலம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்,

அர்ஜென்டினா:

கடந்த உலகக் கோப்பையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா 3-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது. இப்போது 1962-ம் ஆண்டுக்கு பிறகு உலகக்கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முதல் அணி என்ற பெருமையை பெறுவதற்கு முனைப்பு காட்டுகிறது. 38 வயதானாலும் இன்னும் அந்த அணியின் இதயதுடிப்பாக கேப்டன் லயோனல் மெஸ்சி தான் இருக்கிறார். 2022-ல் உலகக் கோப்பை வெற்றி, 2024-ல் கோபா அமெரிக்கா கால்பந்தில் மகுடம் மற்றும் இன்டர்மியாமி கிளப்புக்காக முதல்முறையாக எம்.எல்.எஸ். கோப் பையை வென்று தந்த உற்சாகத்துடன் களம் காணுகிறார். 6-வது முறை யாக உலகக் கோப்பையில் ஆட இருக்கும் மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டி என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரது அனுபவம் அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும். பந்தை லாவகமாக கடத்திக் கொண்டு பாம்பு போல் வளைந்து நெளிந்து ஊடு ருவி கோலாக்கும் அந்த நளினமான ஆட்டத்தை காண கோடிக்கணக் கான ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அதனால் எதிரணியின் முதல் குறி அவராகத் தான் இருப்பார். மேலும் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களும் அர்ஜென்டினா அணியில் உள்ளனர்.

போர்ச்சுகல்:

இதுவரை உலகக் கோப்பைக்கு அனுப்பிய போர்ச்சுகல் அணிகளிலேயே இதுதான் 'பெஸ்ட்' அணியாக தோன்றுகிறது. 2016-ல் யூரோ கோப்பையையும், அதன் பிறகு இரு நேஷன்ஸ் லீக் பட்டங்களை யும் வென்ற பிறகு முக்கியமான போட்டிகளில் தங்களை ஒரு நிலையான போட்டியாளராக நிலைநிறுத்தியுள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறாத போர்ச்சுகல் இந்த முறை, உலகக் கோப்பை வெல்லும் அளவுக்கு தங்கள் அணியின் ஆழம் இருப்பதாக உறுதியாக நம்புகிறது.சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்தவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (143 கோல்) அந்த அணியின் கேப்டனாக இருப்பது மிகப் பெரிய பலம். பெர்னாண்டோ சில்வா, ரபெல் லியோ, ஜாவ் நெர்வ்ஸ், ருபெல் டயாஸ் என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை.

பிரேசில்:

இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில். இந்த உலகளாவிய விளையாட்டின் சாதனை சாம்பியன்களாகவும் (5 முறை), இந்த அழகான விளை யாட்டின் முன்னோடிகளாகவும் இருக்கிறார்கள். பிரேசிலில் கால்பந்து என்பது விளையாட்டை தாண்டி அவர்களின் கலாசாரத்தில் ஒரு முக்கிய உணர்வாகவும், அங்கமாகவும் விளங்குகிறது. இருப்பினும் 2002-ம் ஆண் டுக்கு பிறகு அவர்கள் உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த முறை காலிறுதியை தாண்டவில்லை.தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 28 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பெற்றாலும் காகிதத்தில் பார்க்கும் போது உலகக் கோப்பை யில் பிரேசில் மிக வலிமையான அணிகளில் ஒன்றாகவே தென்படுகிறது. குறிப்பாக 'அட்டாக்' மற்றும் நடுகளத்தில் திடமாக இருக்கிறது. வினிசி யஸ் ஜூனியர் மற்றும் ரபின்யா ஆகியோர் சந்தேகத்துக்கு இடமின்றி உலக போட்டியில் மிகச்சிறந்த விங்கர்களில் இருவர் ஆவார். அவர்களின் பார்ம் தான் பிரேசிலின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.

மற்றொரு நட்சத்திர வீரர் நெய்மார் உலகக் கோப்பையில் ஆடுவாரா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், பயிற்சியாளர் கார்லோ அன்சேலோட்டி அவரை தேர்வு செய்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவரான நெய்மார் (79 கோல்) களம் காணும் போது அது இளம் வீரர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். ஒருங்கிணைந்து ஆடும் பட்சத்தில் நிச்சயம் பிரேசில் பிரமிக்கத்தக்க ஒரு அணியாக மிளிரும்.

ஸ்பெயின்:

ஸ்பெயின் 2010-ம் ஆண்டில் முதல்முறையாக உலகக் கிரீடத்தை சூடியது. இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் கனகச்சிதமான கலவையில் அமைந்திருப்பது அவர்களுக்கு பிளஸ் பாயிண்ட். 2024-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை (யூரோ) கைப்பற்றிய பிறகு அணி மீதான நம்பிக்கை முன்பு எப்போதை யும் விட எகிறியுள்ளது. போட்டி அட்டவணைப்படி பார்த்தால் அரையிறுதி வரை எளிதாக முன்னேற வாய்ப்பு உள்ளது.வலிமையான தாக்குதல் மற்றும் மேம்பட்ட தற்காப்பு வியூகங்களை கொண்டிருக்கிறது. லாமின் யமால், பெட்ரி, டேனி ஒல்மோ, மைகேல் ஒயர்ஜபால் உள்ளிட்ட வீரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். குறிப்பாக புதிய நட்சத்திரமாக உருவெடுக்கும் 18 வயதான லாமின் யமால் துடிப்பான இளம் வீரராக வலம் வருகிறார். காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

இங்கிலாந்து:

தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று.உலக தரவரி சையில் 4-வது இடம் வகிக்கும் 'மூன்று லயன்ஸ்' எனப்படும் இங்கிலாந்து 1966-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உலகக் கோப்பையை கையில் ஏந்தும் இலக்குடன் படையெடுத்துள்ளது. இங்கிலாந்தின் புதிய தலைமுறை வீரர்களில் ஒருவரான பெல்லிங்ஹாம் ஆட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நடுகள வீரராக வளர்ந்துள்ளார். ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் விறுவிறுப்பான ஒரு தாக்குதல் குழுவை ஒருங்கே பெற்றுள்ளது. புகாயா சாகா, பெல்லிங்காம், மார்கஸ் ராஷ்போர்டு போன்ற பரிட்சயமான வீரர்கள் கோல் வாய்ப்புகளை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள்

பிரான்ஸ்:

1998 மற்றும் 2018-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் கடந்த உலகக் கோப்பையில் இறுதி வரை வந்து தோற்றது. தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடம் வகிக்கும் பிரான்ஸ் மிகவும் பலம்பொருந்திய அணியாக விளங்குகிறது.முக்கியமான பெரிய போட்டிகளை வெற்றிகர மாக கையாள்வதில் பிரான்சுக்கு அனுபவம் அதிகம். தலைமை பயிற்சியாளர் டிடியர் டெசாம்ப்ஸ் அழுத்தமான தருணங்களையும் உள்வாங்கி உற்சாகமாக ஆடும் ஒரு அணியாக கட்டமைத்து இருக்கிறார். அதனால் தான் அந்த அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உலக கால்பந்து அரங்கில் மிகச்சிறந்த முன் கள வீரர்களில் ஒருவரான கிலியன் எம்பாப்பே இருப்பது அசுர பலம். பந்தை கடத்திக் கொண்டு அவர் ஓடும் மின்னல் வேகம், எதிரணி வீரர்களை திகைக்க வைத்து விடும். எந்த கோணத்தில் இருந்தும் கோல் அடிப்பதில் வல்லவர்.

இதே போல் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றவரான உஸ்மான் டெம்பிளேவும் இந்த சீசனில் கோல் மழை பொழிந்து வருகிறார்.

ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, மொராக்கோ உள்ளிட்ட அணிகளும் மிரட்டுவதற்கு வாய்ப்புள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com