

வான்கூவர்,
கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா மற்றும் கத்தார் அணிகள் வான்கூவரில் இன்று மோதின.
தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா அணியில், ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் சைல் லாரின் முதல் கோலை பதிவு செய்து அணியை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து ஜொனாதன் டேவிட் கோல் அடித்து முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
இதையடுத்து கத்தார் அணியின் அனைத்து கோல் முயற்சிகளும் கனடா வீரர்களால் முறியடிக்கப்பட்டன. அப்போது முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் மீண்டும் ஜொனாதன் டேவிட் கோல் அடித்ததன் மூலம் கனடா அணி முதல் பாதி முடிவில் 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
2-வது பாதியிலும் கனடா அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. 64-வது நிமிடத்தில் நாதன் சலிபா கோல் அடித்து அணியின் முன்னிலையை 4-0 ஆக உயர்த்தினார். இதையடுத்து ஆட்டத்திற்குள் மீண்டு வர கத்தார் அணி முயற்சித்த போதிலும், கனடாவின் தற்காப்பை உடைக்க முடியவில்லை.
75-வது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் அடித்த பந்து ஓன் கோலாக மாறியதால், கனடாவின் கோல் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஜொனாதன் டேவிட் தனது 3-வது கோலை பதிவு செய்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், கனடாவின் கோல் எண்ணிக்கையை 6-ஆக உயர்த்தினார்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் டிரா செய்திருந்த கனடா, இந்த வெற்றியின் மூலம் குரூப்-பி பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.