உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியாவை 4-1 என பந்தாடிய சுவிட்சர்லாந்து

இந்த வெற்றியின் மூலம் குரூப்-பி புள்ளிப்பட்டியலில் சுவிட்சர்லாந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியாவை 4-1 என பந்தாடிய சுவிட்சர்லாந்து
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது.

சுவிட்சர்லாந்து - போஸ்னியா மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா அணிகள் இன்று மோதின. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.

முதல் பாதியில் கோல் இல்லை

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.

2-வது பாதியில் சுவிட்சர்லாந்தின் கோல் மழை

இதையடுத்து தொடங்கிய 2-வது பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

அதனைத் தொடர்ந்து 84-வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் கோல் அடித்து சுவிட்சர்லாந்தின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். பின்னர் 90-வது நிமிடத்தில் மீண்டும் ஜோஹன் மன்சாம்பி கோல் அடித்து அணிக்கு 3-வது கோலை பெற்று தந்தார்.

ஆறுதல் கோல் அடித்த போஸ்னியா

தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போஸ்னியா அணிக்கு எர்மின் மஹ்மிக் ஒரு கோல் அடித்து முன்னிலை வித்தியாசத்தை 3-1 ஆக குறைத்தார். இருப்பினும், அந்த அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியவில்லை.

பெனால்டி வாய்ப்பு

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஷக்கா சிறப்பாக பயன்படுத்தி அணியின் 4-வது கோலை பதிவு செய்தார்.

2-வது இடத்திற்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து

இறுதியில், ஆட்ட நேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் டிரா செய்திருந்த சுவிட்சர்லாந்து, இந்த வெற்றியின் மூலம் குரூப்-பி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com