இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே உடல்நல குறைவால் இன்று காலமானார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார்
Published on

கொல்கத்தா,

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே. நீண்டகாலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 81.

1941-ம் ஆண்டு மே 4-ந்தேதி பிறந்த அவர், இந்திய அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், குறிப்பிடும்படியாக மலேசியாவின் கோலாலம்பூரில் 1966-ம் ஆண்டில் மெர்டெக்கா கோப்பைக்காக நடந்த போட்டியில், கொரியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார்.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அவர் அடித்த கோல் ஆனது, இந்திய அணி 3-வது இடம் பிடிக்க உதவியது. கிளப் போட்டிகளில் கிழக்கு வங்காள அணிக்காக விளையாடிய அவர் மொத்தம் 84 கோல்கள் போட்டுள்ளார்.

கல்கத்தா கால்பந்து லீக் மற்றும் ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டிகளில் தனித்துவ வெற்றிகளை பெற்று சாதனை படைத்து உள்ளார். ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டியில் 1966, 1970 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளார்.

துணை வீரராக போட்டியில் களம் கண்டு விரைவாக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை 1970-ம் ஆண்டு ஈரானின் பி.ஏ.எஸ். கிளப்புக்கு எதிரான இறுதி போட்டியில் நிகழ்த்தினார். துரந்த் கோப்பையை 2 முறையும், ரோவர்ஸ் கோப்பையை 3 முறையும் வென்றுள்ளார்.

தேசிய அளவில் வங்காளத்திற்கு தலைமையேற்று சென்று சந்தோஷ் டிராபி கோப்பையை 1962 மற்றும் 1968 ஆகிய ஆண்டுகளில் 2 முறை வெல்ல உதவினார். 1971-ம் ஆண்டு மோகன் பகான் அணியில் இணைந்து ரோவர்ஸ் கோப்பையை வென்றார்.

அவரது மறைவுக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சவுபே இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது மறைவு இந்திய கால்பந்து அணிக்கு பேரிழப்பு. ஜங்கிலா-டா என அன்புடன் அழைக்கப்பட்டவர்.

இன்று வரை ரசிகர்களின் மனதில் நிறைந்திருப்பவர். அவரது குடும்பத்தினரின் எண்ணங்களுடன் கலந்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com