

லண்டன் ,
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா தொற்று எதிரொலியால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த பர்ன்லி-ஆஸ்டன் வில்லா அணிகளுக்கு இடையேயான போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே, கடந்த வாரம் நடைபெற இருந்த 10 போட்டிகளில் 6 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆஸ்டன் வில்லா அணியின் வீரர் ஒருவர் கொரோனா பயம் காரணமாக தான் பயணித்த காரிலிருந்து வெளியே வர மறுத்து அடம்பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதுகுறித்து ஆஸ்டன் வில்லா கிளப் அணியின் மேலாளர் ஸ்டீவன் ஜெரார்ட் கூறுகையில்,
அந்த கால்பந்து வீரருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அவருக்கு ஒரு குடும்பம் உள்ளது. இது கிறிஸ்துமஸ் நேரம். இந்த சமயத்தில் யாரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக விரும்பமாட்டார்கள். அனைவரும் தங்களது குடும்பத்தை பாதுகாக்கவே விரும்புகிறார்கள். ஆனால், கொரோனா பரிசோதனை முடிவில் அந்த வீரருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு ஸ்டீவன் ஜெரார்ட் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக லிவர்பூல் அணியின் கேப்டன் ஜோர்டான் ஹெண்டர்சன், இங்கிலாந்தில் வீரர்கள் நலன் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
அதேபோன்று அர்செணல் அணியின் மேலாளர் கூறுகையில், வீரர்களின் கவலைகள் கேட்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற காணொலி வாயிலான கூட்டத்தின் முடிவில் அனைத்து கிளப் அணிகளும் ஒருமனதாக பிரீமியர் லீக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தன.
கடந்த வாரத்தில் மட்டும் இந்த தொடரில் பங்கேற்கும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.