சமையல்காரரை தாக்கி, துன்புறுத்தல்; கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது குற்ற வழக்கு பதிவு

சூழலை உணர்ந்ததும், வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு திரும்ப விரும்பினேன் என சமையல்காரர் கூறியுள்ளார்.
சமையல்காரரை தாக்கி, துன்புறுத்தல்; கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது குற்ற வழக்கு பதிவு
Published on

போபால்

வீட்டு சமையல்காரரை அடித்து, துன்புறுத்திய புகாரின்பேரில் கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், அவருடைய தந்தை மீது குற்ற வழக்கு பதிவாகி உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக விளையாடி வருபவர் சஷாங் சிங். இவருடைய தந்தை சைலேஷ் சிங், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

சமையல்காரர்

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் மெந்தூரி கிராமத்தில் உள்ள சிங்கின் வீட்டில் சமையல்காரராக சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தவர் விபேந்திர சிங் தோமர் (வயது 31). வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டு வந்த அவரை சிங்கும், அவருடைய தந்தையும் அடித்து, துன்புறுத்தி காயப்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி விபேந்திர சிங், ரதிபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், வேலைக்கு சேர்ந்த சில மணிரேத்திலேயே மனஅழுத்தம் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தல் செய்தல் போன்றவற்றை எதிர்கொண்டேன். நான் சமைத்த உணவின் தரம் சரியில்லை என கூறி அவர்கள் திட்டினர்.

குற்றச்சாட்டு

இந்த சூழலை உணர்ந்ததும், வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு திரும்ப விரும்பினேன். இதனை அறிந்ததும் ஆத்திரமடைந்த அவர்கள் என்னுடைய மொபைல் போனை பறித்து வைத்துக்கொண்டு, யாரிடமும் பேச முடியாமல் தடுத்து விட்டனர். தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தினர் என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

இதனால், பயந்து போன விபேந்திர சிங் அறைக்குள் சென்று கதவை உள்ளே பூட்டி விட்டு இருந்துள்ளார். அப்போது சிங், அவருடைய தந்தை மற்றும் கார் ஓட்டுநர் என 3 பேரும் சேர்ந்து கதவை உடைத்து, உள்ளே சென்று விபேந்திர சிங்கை கடுமையாக தாக்கியுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் விபேந்திர சிங்கின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

எப்.ஐ.ஆர். பதிவு

இதனை போலீசார் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, சிங் மற்றும் அவருடைய தந்தைக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com