மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தை விமர்சித்த இந்திய வீரர்

மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தை, அபினவ் பிந்த்ரா விமர்சித்துள்ளார்.
மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தை விமர்சித்த இந்திய வீரர்
Published on

புதுடெல்லி,

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி, கோட் இந்தியா டூர் 2025 என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார். முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர். இதனால் குழப்பம் ஏற்பட்டாலும் அவரது பயணம் தடங்கலின்றி தொடர்ந்தது.

பின்னர் ஐதராபாத், மும்பை சென்ற மெஸ்சி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மெஸ்சி மும்பையில் இருந்து தனி விமானத்தில் நேற்று டெல்லி சென்றார்.

மெஸ்சியின் வருகையொட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரபலங்களுக்கான கண்காட்சி கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மினெரவா ஆல் ஸ்டார் அணி 6-0 கோல் கணக்கில் செலிபிரட்டி ஆல்-ஸ்டார் அணியை வீழ்த்தியது. மெஸ்சியை காண மைதானத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மெஸ்சி நுழைந்ததும் அவரது பெயரை உச்சரித்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இளம் கால்பந்து வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடிய மெஸ்சி, பின்னர் மைதானத்தில் கரைபுரண்ட உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில் வலம் வந்தார். மெஸ்சியுடன், இண்டர் மியாமி கிளப் வீரர்கள் ரோட்ரிகா டி பால், லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் பந்தை ரசிகர்களை நோக்கி உதைத்து குஷிப்படுத்தினர்.

இந்த நிலையில் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தை ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் அபினவ் பிந்த்ரா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக  அவர் கூறியதாவது,

தனிப்பட்ட முறையில் மெஸ்சி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். ஆனால் மெஸ்சியுடன் நெருக்கமாக போட்டோ எடுப்பதற்கும், கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கோடிக்கணக்கில் செலவிடப்படுவதை பார்ப்பது சற்று கவலை அளிக்கிறது. இப்படி செலவிடப்படும் தொகையை இந்திய விளையாட்டின் வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்புகளுக்கும் செலவழிக்கலாம் என்று பிந்த்ரா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com