

சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, அறிமுக அணியான இன்டர் காஷியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பந்து சென்னை பக்கமே (66 சதவீதம்) அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தாலும் அதிர்ஷ்டம் என்னவோ இன்டர் காஷிக்கு தான் இருந்தது. அந்த அணியின் ஆல்பிரெட் பிளானஸ் 46 மற்றும் 54-வது நிமிடங்களில் கோல் அடித்தார். பதிலடி கொடுக்க போராடிய சென்னை அணி கடைசி நிமிடத்தில் ஒரு கோல் திருப்பியது. அந்த கோலை சிமா சுக்வு அடித்தார்.
இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 6-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்டர் காஷி அணிக்கு கிடைத்த 2-வது வெற்றியாகும். ஜாம்ஷெட்பூரில் நாளை நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.