நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரி ஏன் இடம்பெறவில்லை..? தலைமை பயிற்சியாளர் விளக்கம்


நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரி ஏன் இடம்பெறவில்லை..? தலைமை பயிற்சியாளர் விளக்கம்
x

image courtesy:PTI

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஓமன் அணிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி இறுதிசுற்றை எட்டும்.

‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தஜிகிஸ்தானை வருகிற 29-ந் தேதி எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து செப்.1-ந் தேதி ஈரானையும், செப்.4-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் சந்திக்கிறது.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தொடர் இதுவாகும். இந்த போட்டிக்கான 35 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியை காலித் ஜமீல் தேர்வு செய்தார். வீரர்களின் அந்த பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில் முன்னணி நட்சத்திர வீரரான சுனில் சேத்ரிக்கு இடமில்லை. அவர் அணியில் இடம் பிடிக்காததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சுனில் சேத்ரி இடம்பெறாததற்கான காரணம் குறித்து பேசிய காலித் ஜமீல், “சுனில் செத்ரி இந்திய கால்பந்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். மேலும் அவருக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும். இந்த முகாமில் அவர் இல்லை, ஏனெனில் நாங்கள் ஒரு தொடரில் விளையாடுகிறோம். இது எங்கள் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுக்கான தயாரிப்பாக இருக்கும். மேலும் நான் வேறு சில வீரர்களை முயற்சிக்க விரும்புகிறேன். நான் அவருடனும் இதைப் பற்றிப் பேசினேன். அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது மகிழ்ச்சியே” என்று கூறினார்.

காலித் ஜமீல் தேர்வு செய்த இந்திய உத்தேச அணி விவரம்: அம்ரீந்தர் சிங், குர்பிரீத் சிங் சந்து, ஹிருத்திக் திவாரி, ஆகாஷ் மிஸ்ரா, அலெக்ஸ் சாஜி, போரிஸ் சிங் தங்கஜாம், சிங்லென்சனா சிங் கோன்ஷாம், ஹமிங்தன்மாவியா ரால்டே, ராகுல் பெகே, ரோஷன் சிங் நவுரெம், சந்தேஷ் ஜிங்கன், சுனில் பெஞ்சமின், ஆஷிக் குருனியன், டேனிஷ் பரூக் பட், நிகில் பிரபு, ராகுல் கண்ணோலி பிரவீன், சுரேஷ் சிங் வாங்ஜாம், உதாந்த சிங் குமம், இர்பான் யாத்வாத், லல்லியன்சுவாலா சாங்தே, ரஹீம் அலி, விக்ரம் பர்தாப் சிங், அனிருத் தாபா, தீபக் டாங்ரி, லாலெங்மாவியா ரால்டே, லிஸ்டன் கோலாகோ, மன்வீர் சிங், சாஹல் அப்துல் சமத், விஷால் கைத், அன்வர் அலி, ஜீக்சன் சிங், நௌரெம் மகேஷ் சிங், ஜித்தின் எம்.எஸ்.

1 More update

Next Story